Pages

Sunday, November 2, 2014


TRIP TO ELAGIRI!!






அன்புக்குறிய எல்லோருக்கும்     


என் வாழ்த்துக்கள்.


சென்ற வார இறுதியில்  மனமும் , உடலும்  ஓய்வு தேவை என உரத்த குரலில் சொல்ல   3 நாட்கள் ஏலகிரி மலைக்கு சென்று வந்தோம்.


கொண்டை ஊசி வளைவுகளும் , அந்த வளைவுகள் சுமந்த அழகான தமிழ் பெயர்களும் (திருவள்ளுவர் ஒளவையார் கபிலன் கம்பன் பாரி ஓரி ஆய் பேகன் அதியமான் பாரதி பாரதி  தாசன் இளங்கோ என ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவும் தனி தமிழ் பேர் சூடி) வரவேற்ற கோலம் தீபாவளி  தித்திப்பை நெஞ்சில் நிறைத்தது


 கூடவே ஓடி வரும் இயற்கை காட்சிகளும், தொலைவில் தெரிந்த பச்சை மலைகளும்  மரகத போர்வை போர்த்தினர்போன்று தோன்றிய நில  மங்கையும், காண கண் கோடி  வேண்டும்.  இவ்வளவு அழகும் சுகமும் கொட்டி கிடக்கையில், மனித மனங்களின்  ஏற்ற தாழ்வும், கோபமும், தாபமும் , தான் என்ற எண்ணமும் எவ்வளவு வேண்டாத  சலனங்கள் என்று எண்ணம் படர்ந்தது. 


 நாங்கள் மேலே செல்ல காத்து இருந்தது போல் சட்டென எங்களை உள்வாங்கிய மேகக்குவியல்களும் , அதிலிருந்து எங்களை வர்ஷித்த மழை சாரலும் , கொள்ளை இனிமை.  
ஸ்டெர்லிங் ரிசார்ட்சின் அன்பான வரவேற்பும், ஏகாந்தமான, ரம்யமான அறைகளும் , நீல வானமாக ஜொலித்த நீந்தும் குளமும் இருவர் மட்டுமே அமர்ந்து பேசி களிக்கவும் , பேசாமல் புரிந்து கொள்ளவும் போடப்பட்டிருந்த இருக்கைகளும், மாலை படரும் நேரம் மின்மினி பூச்சிகளாக கண்ணை உறுத்தாமல் போடப்பட்ட விளக்குகளும் . ஒவ்வொன்றும் மயில் இறகாய் மனதை வருடும் தருணங்கள். 


இதற்கு முன் கொடைக்கானல், ஊட்டி, டார்ஜிலிங் , சிம்லா ஏற்காடு என்று பல இடங்களுக்கு தனியாவோ பிறருடனோ சென்று வந்த நினைவுகளும் அப்போதைய ரசமான நிகழ்வுகளும்,  அப்போது இருந்த சிநேகமும், புரிதலும், நல்ல உறவுகளின் பாலமும் மனதில் நிழலாடின. !!
தேவை இல்லாத எதிர் மறை எண்ணங்களை எல்லாம் மறக்கவும், மனதில் அமைதி நிலவவும் நல்லவர்களுக்கு உதவ நான் எப்போதும் இருக்கின்றேன் என்று சொல்வது போல் , குன்று இருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது போல் ரிசார்ட்சின் அருகே இருந்த முருகன் கோவில் எங்களை வரவேற்றது.ஷஷ்டி விழாவின்   ஆரம்பத்தில் இயற்கை போர்வை  போர்த்திய  மலையின் மடியில்  கொள்ளை சிரிப்பும் கொவ்வை செவ்வாயும் கொண்டு குமரன் எங்கள் உள்ளம் கவர்ந்த்ன்  .


அழகும் நேர்த்தியும் சுத்தமும் கூடிய  படிகள் ஏறுவதற்கு ச்ரமபடாமல் கால்களை அந்த  சிங்கார வேலன் சன்னதிக்கு அழைத்து செல்கின்றன .அழகான  இரு கோபுரங்கள் அண்ணனும் தம்பியும் உறைந்து ஆசிகள் நல்கும் இருப்பிடங்கள். விநாயகர் முன்னம் கட்டியம் கூற  பின்னே வருவான் வடிவேலன்
ஷஷ்டி விழாவின் ஆரம்பத்தில் ஏகாந்தமான ஒரு சேவை . பறவைகளின் குரலும் , காற்றின் கீதமும் பச்சை மலை சுவாசமும் தவிர வேறு தீண்டல்கள் இலாத ஒரு பூலோக சொர்க்கம் கண் முன்  சட்டென எழுந்ததது !!, உடன் இருந்து எங்கள் ஆனந்தம் மேலும் சோபிக்க முடியாமல் வீட்டு வந்த மற்ற உறவுகள் , நண்பர்கள் குறிப்பாக என் மகளும் பேரனும் நினைவில் வந்து சென்றனர் .  .


 பிரிய மனம் இல்லாமல் , மணி ஓசை எங்கள் நெஞ்சம் நிறைக்க , கந்தன் அலங்காரம் எங்கள் கண்ணை நிறைக்க ஆடும் மயிலும் நீண்ட வேலும் எங்கள் மன வேதனை போக்க , சுற்றி  உள்ள மலைகளின் பசுமை போர்வை எங்களை பிரமிக்க வைக்க நேரம் காலம் கடந்த மோன தவத்தில் நாங்கள் மூழ்கி போனோம் .
அடுத்து அடுத்து நாங்கள் சென்ற ஏரியும் , பூங்காவும் , ஆர்பரிக்காமல்  பள்ளதாக்கில் கோவில் கொண்டு  எங்களை நெகிழ வாய்த்த எங்கள் குல தெய்வ  ரூபத்தில் எங்களை இளகவைத்த ஸ்ரீ ஏலகிரி தாயார் சமேத ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண தரிசனமும் , மிக நளினமான ஆண்டாள் சன்னதியும் ஒருங்கே உள்ளத்தை அமைதி படுத்தி உதவின .


 3 நாட்கள் 3 மணி நேரமாக கடந்து  சென்னை  அடைவதற்கு முன் ஏற்பட்ட  ஒரு சம்பவம் துன்பமும் இன்பமும் அருகே தான் உள்ளன , அவற்றை கடந்து இயற்கையும் இறையும் என்றும் உடன் வருகின்றனர் என்பதை உரைத்தது .


அது பற்றிய குறிப்பு அடுத்து !!


யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் எனும் எண்ணத்தில் இந்த பதிவு கோடி கோடி இன்பம் வைத்த அந்த மகா சக்திக்கு ஒரு காணிக்கை !!



Saturday, November 1, 2014

இல்லம் திரும்பும் இளைஞனுக்கு

It is a month since my son's arrival at CHENNAI. THOUGHT OF REVISITING my earlier welcome address to him now thru this blog , which is also forming part of publication by HK TAMIL school in their october issue.
இல்லம் திரும்பும் இளைஞனுக்கு
இனியதொரு தாலாட்டு
ஆயுத பூஜை இன்று
 உன் நலம் விழைகின்றது!
 விஜயதசமியின் விஜயம்
 உன் ஜெயம் பாடுகிறது!
 
 பலமில்லா கால்கள் அன்று            
 பாயும் நீரோடை இன்று !
 சர்வோஜனா சுகினோ பவந்து
 ஒரு முகவுரையாய் அன்று !
 
 எல்லோரும் நேசிக்கும்
 ஒரு இளைஞனாய் இன்று
 பாதைகள் மாறினாலும்
 பண்புகள் மாறவில்லை!
 
மாறாதது மாற்றம் அது    
மனம் காக்கும் மந்திரம்
வானம் இன்னும் விரிவடையும்
உன்னுயரம் இன்னும் விண்ணை தொடும்!
  
நடந்து  வந்த பாதையும்
நடை போடும் பாதையும்
நடக்க போகும் பாதையும்
நேற்றும் ,இன்றும்  நாளையுமே  !!
 
வாழ்க்கை ஒரு வினோதம்
வானவில்லின் வடிவும் வனப்பும்
சொல்லில் அடங்கா வெறுப்பும் துயரும்
இங்கே நடை முறை நிதர்சனங்கள் !
 
இவை இரண்டும் ஒரு நாணயத்தின்
இரு பக்கம் என உணர்ந்ததால் நீ
ஒரு ஷேக்ஸ்பியர் என உணரபடுவாய்
உன்னை சேர்ந்தோரை உணர்விப்பாய் !
 
தந்தையும் மகனுமாய் இல்லாது
தாயும் சேயுமாய் இல்லாது
சக மனிதர்களை நேசிக்கும்
நம் பாலம் நமக்கு சொர்க்கம்!
  
 நம் தர்க்கங்கள் நீண்டவை
வாக்குவாதங்கள் வல்லவை
ஒவ்வொன்றும் ஒரு  கற்கண்டு
அன்னியற்கோ அது கல் குண்டு
                                                                
தங்கை நல்லாளின் முறுவலும்
அவள் தன் குருத்தின் மழலையும்
விண்ணவரின் ஆசியும் மண்ணோரின்
நேசமும் உனக்கு காப்பு கட்டும் கவசம் !
 
முப்பது ஆண்டுகள் உன்னை சுமந்தன
இனி மீதம் உள்ளவை நீ சுமப்பவை
சுமையும் ஒரு சுகம் தான்
சுற்றி உள்ளோருக்கு ஒரு உரம் தான்!  
 
நினைப்பதெல்லாம் நடக்ககூடும்
நித்திலம் உன் கை வசப்பட கூடும்
நிதானமும் நிஜமும் உன்னிடம் இருப்பதால்
வானமும் மண்ணும் உன் வசப்படட்டும் !
  இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
உன்னை மலர் தூவி வாழ்த்தட்டும்.                                          
உன் தேடல்கள் சுகமாய் சுவையை
சேர்க்கும் காலமாய் அமையட்டும் .
 
            
 
அன்புடன்
உன்னில் எனை கொடுத்து
உன்னில் எனை தொலைத்து
உன்னில் எனை பார்த்து
உன்னில் என்னை உயர்த்தும்
நட்புடன் தந்தை .