Pages

Sunday, July 28, 2013

இதற்கு தானே ஆசை பட்டாய் சம்பத் குமாரா !

குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் மழலை சொல் கேளாதவர்!! வள்ளுவன் வாக்கின் சாரம் இப்போது என் பேரன் மூலம் உணர்ந்தேன் . என் மகனும் மகளும் பேசிய மழலை நான் என் வேலைக்கு கொடுத்த விலையாக என்னால் உணரப் படாமலே போய்விட்டது .இறைவன் கொடுத்த வரமாக இப்போது இன்னுமொரு தருணம்.ஒரு சில ஆனந்த கணங்கள் . என் பேரன் தவழும் போதும் புரண்டு எழும்போதும் விழும்போதும் ,உணவுக்காக பரபரக்கும் போதும், கொடுக்க ஆரம்பித்த மூன்றாவது கவளத்தில் கெட்டியாக வாய் மூடி கொள்ளூம் போதும், கஷ்டப்பட்டு என் மகள் அவன் வாய் திறந்து ஊட்ட முயலும்போது அவன் வாய் திறந்து சின்னதாக புன்னகை புரியும் போதும் இது பிள்ளையா இல்லை கார் மேககண்ணன் தானா என்ற ஐயம் எழுகின்றது தூளியில் இருந்து என் குரல் கேட்டு எழுந்து சற்றே தலை வெளியே நீட்டி , சின்ன முறுவல் காட்டி தாத்தா என்று அழைக்கும் அந்த நிமிடம் உலகின் எல்லா சொர்கங்களும் என் காலடியில் !! அள்ளி அணைத்து கொஞ்சும் போது "கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி , உன்னை தழுவிடிலோ உன்மத்தமாகுதடி " என்ற பாரதியின் கவிதை வரிகள் என்னை நெக்குருக செய்கின்றன. அவன் மெல்ல மெல்ல அடி வைத்து படி ஏறும் அந்த தருணம் , உள்ளமெல்லாம் அந்த காலடியில் உயிர் சேர்க்கும் தருணம் என்றால் அது மிகை இல்லை. விஷமங்கள் எல்லாம் மொத்த குத்தகைக்கு எடுத்தவன் அவன். ஆனால் அதே சமயம் தன மாய புன்னகையால் மற்றவர்களை கட்டிபோடும் கண்ணன் அவன் . அவன் தவழ ஆரம்பித்து சில நாட்களில் உடைத்த பொருட்களுக்கு கணக்கு இல்லை :அந்த மழலை பேச்சால் அம்மா,தாத்தா ,அத்தை,பய் ,ஹாய்,பாத்தி என்று அடுத்த நிமிடம் அந்த உடைந்த பொருட்களுக்கு உயிர் வழங்க அவனுக்கு மட்டுமே தெரியும் !!உடைக்க தானே பொம்மைகள்? ஓடி வருகையிலே உள்ளம் குளிர்விப்பதும் ஆடி திரியும் போது ஆவி சிலிர்பதும்அவனுக்கு இயல்பாக அமைந்து விட்டன. மெல்லிய மழை சாரலும் இனிய குழல் இசையும் , நல்ல புத்தகங்களும் ஓடும் நதியும் ,பொங்கும் அருவியும் இறையின் நாமமும் ,அருசுவை உணவும் ஒரு சேர கொடுக்கும் கிடைக்கும் சுகம் இவனை சீராட்டி பாராட்டி உச்சி முகரும்போது ஏற்படுகின்றது . இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்லும் , ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தாய் என்ற வாக்கும் இவன் தந்தைக்கும் தாய்க்கும் அமைந்து இவன் வையகம் போற்ற வாழ்ந்திட என் பிரார்த்தனைகள் !! இதற்கு தானே ஆசை பட்டாய் சம்பத் குமாரா என்ற அசரீரி என் மனத்தில் ரீங்கரமிடுகின்றது!