Sunday, December 16, 2012
WELCOME THOUGHTS TO MY SON
திரும்பி பார்கிறேன்
விரும்பி பார்கிறேன்
ஆம் என் அன்பு மகன் எங்களிடம் சென்னைஇல் இருந்து விடை பெற்று சென்ற நாள் முதல் (17/10/2010) இன்று வரை நடந்த நிகழ்வுகள் (இரண்டு வருட முடிவில்)அவை ஏற்படுத்திய சலனங்கள், அவை கற்று கொடுத்த அனுபவங்கள் என்று வரிசை படுத்தி போகலாம் .எல்லா அனுபவங்களுமே நல்லவை தாம் , அவற்றை எடுத்து கொள்ளும் மனப்பாங்கு மட்டுமே வேறு படுகின்றது என்று "யாரோ" கூறியது நினைவில்
வருகின்றது.
தசரதன் தன் பிள்ளை ராமனை விட்டு பிரிந்த போது அவர் அடைந்த மன வேதனைகள் பற்றி பல முறை பல வேளைகளில் , பல அரங்குகளில் , பல்வேறு வயதினில் கேட்டாகிவிட்டது.என் தந்தை என்னை விட்டு இருக்க வேண்டிய நேரங்களில், அதிகம் பேசாத அவர் தன் பாசம் பற்றிய உணர்வுகளை வெளிகாட்டிய விதமும் அனுபவித்து ஆகிவிட்டது.தந்தை மகன் என்றாலே ஆடும் புலியுமாக இருந்த உறவு விரிசல்களும் பார்த்தாகிவிட்டது.
முதலில் நான் தசரதன் என்றோ என் மகன் ராமன் என்றோ நான் சொல்வதாக அர்த்த படுத்தி கொள்ள வேண்டாம் .தசரதனிடம் இருந்து நான் ஆரம்பித்த காரணம் எவ்வளவு காலங்கள் ஆனாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை என்று காட்டத் தான்.இன்று கணினி யுகம்.நினைத்தால் தொடர்பு கொண்டு பேசவோ. அல்லது(சற்றே பண வசதி கூடுதல் ஆக இருந்தால்) நேரிலே கூட விமானம் ஏறி வந்து பார்க்க வோ முடியும்.ஆயினும் பிரிவுகளும் அவை கொடுக்கும் வேதனைகளும் காலம் காலமாக அப்படியே தான் இருக்கின்றன.இன்னும் பார்த்தால் நான் சுட்டி காட்டிய சில விரிசல்கள் கூட பாசத்தின் மிகுதியால் அவற்றை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் போனதால் இருக்கலாம்..மன்னிக்கவும், எண்ணங்கள் தடம் புரண்டு விட்டன...மீண்டும் ஒருமை படுத்தி பார்க்கலாம் .
மேற்சொன்னவை வைத்து நான் மிகவும் துயரத்தில் உள்ளதாக அர்த்தம் இல்லை.வலி இல்லை என்று சொன்னால் அது பொய்.அந்த வலி யை துடைக்கும் மந்திரம் என் மகனிடம் உள்ளது என்பது தான் உண்மை.நங்கள் இருவரும் ஒரு தந்தை மகனாக இருக்கும் நிலை தாண்டி நல்ல நண்பர்கள் என்ற நிலைக்கு எங்கள் உறவை வளர்த்து கொண்டதால் ஏற்பட்ட பகிர்தலும் புரிதலும் இந்த கால தூர பரிணாமங்களை ஒரளவு எதிர் கொள்ள எங்களை தயார் செய்துள்ளது.
டிசெம்பர் 17,2010 அவன் விடை பெற்ற நாள்.2011 , ஜூன் மகளின் திருமணம் காரணமாக அவன் வந்து சென்ற நாட்கள் என் மனோ பலம் கூட்டிய நாட்கள்.மே 2012 தன் சகோதரியின் ஆசை மகனை அணைத்து உச்சி முகர அவன் வந்து சென்ற நாட்கள் நான் இல்லாத இடத்தை (வேலை நிமித்தம் நான் வெளியில் இருந்த நாட்கள் இவை)அவன் இட்டு நிரப்பிய நாட்கள்.
இப்படி பல முறைகளில் அவன் தன் வருகையால் வசந்தம் ஏற்படுத்தி சென்றாலும் , அவன் வந்தவுடனேயே , அவன் திரும்பி போகவேண்டும் என்ற நிலையே அவனின் முழு நேர அண்மையை முழுதும் ரசிக்க விடாமல் செய்து விடுவது வழக்கம் .மனம் என்ற குதிரை வசப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை உணர்த்திய நாட்கள் இவை .இந்த இடர் பாடுகளும் ,மன உளைச்சல்களும்,இவற்றுக்கு மேல் அவன் எடுத்து கொண்ட ஆராய்ச்சியினை குறிப்பிட்ட காலகெடுவில் , ஒரு அந்நிய நாட்டில், ஒரு அவ்வளவு இணக்கம் இல்லாத சூழலில் முடிக்க வேண்டிய நிர்பந்தங்களும் அவனுக்கு அதிகமாகவே உண்டு.அப்படிபட்ட நேரங்களில் ஒரு சாட்சியாக மட்டுமே இருந்து கொண்டு, எந்த விதத்திலும் அவனுக்கு உதவ முடியாத சுய இரக்கம் எனக்கு மிக உண்டு. ஆனால் அதையும் மீறி அவன் முயற்சிகளிலும் ,அவன் ஆளுமையிலும் அவன் சுய நம்பிக்கையிலும், இவை எல்லாம் அவனுக்கு வெற்றி கொடுத்து அவனை எங்களிடம் கொண்டு சேர்க்கும் நாள் அதிகத் தூரம் இல்லை என்ற மனோ திடமும் எனக்கு உண்டு .
அவன் தனது மூன்றாவது வருடம் துவங்கும் நாளை முதல் எல்லா பாதைகளும் அவனுக்கு ரோஜா மலர் சாலைகள் ஆக வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.அவனின் சிந்தனையும், அவற்றின் திடமும் அவன் பயணம் செய்கின்ற பாதை வெற்றி பாதை ஆக வாழ்த்துக்கள் .இந்த வருடத்தின் இந்த நாள் அடுத்த வருடம் உதயம் ஆகும் நேரம் அவன் தன் முயற்சியில் புதிய சாதனைகள் படைத்து மீண்டும் தாயகம் திரும்பும் பொற்காலம் என்ற நிச்சயத்துடன் , நிறைவு செய்கின்றேன்.
Subscribe to:
Posts (Atom)